28.6 C
Gombak
Saturday, July 24, 2021

‘மொரட்டோரியம்’ குறித்த குழப்பங்களுக்கான விளக்கங்கள்

Must read

கோலாலம்பூர், 07 ஜூலை (பெர்னாமா) — ‘மொரட்டோரியம்’.

வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாச ஒத்திவைப்பு குறித்து மக்களிடையே குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

உங்களின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கிறார் தனியார் வங்கியின் நிர்வாகி ஜெயகுமார் செல்லையா.

‘மொரட்டோரியம்’-ஐ பெற்றிருக்கும் ஒருவரின் வங்கிக் கடனில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டிக்கான கழிவுகள் வழங்கப்படாது என்று ஜெயகுமார் செல்லையா தெரிவித்தார்.

எனினும், ‘மொரட்டோரியம்’ பெற்றவர்களுக்கு COMPOUNDING INTEREST எனப்படும் கூடுதலான வட்டி விகிதத்தை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வங்கிகளிடம் நிதி அமைச்சு முன்வைத்திருந்தது குறித்து அவர் இவ்வாறு விவரித்தார்.

”வட்டியையும் அசலையும் சேர்த்துதான் நாம் மாதந்திர கட்டணமாகச் செலுத்துவோம். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு அக்கட்டணத்தைச் செலுத்தாத பட்சத்தில் அதனைத் தொடர்ந்து வரும் மாதத்திற்கு, காலதாமத வட்டி விதிக்கப்படும்,” என்றார் அவர்.

இந்நிலையில், நேற்று பேங்க் நெகாரா இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளபோதிலும், ACCRUED INTEREST எனப்படும் சேகரிக்கப்படும் வட்டி கண்டிப்பாக விதிக்கப்படும் என்பதை ஜெயகுமார் சுட்டிக்காட்டினார்.

”உதாரணத்திற்கு, ஒரு மாதத்திற்கு அசல் 500 ரிங்கிட்டாகவும் வட்டி 500 ரிங்கிட்டாகவும் மொத்தம் 1,000 ரிங்கிட் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், வட்டியான 500 ரிங்கிட் ஆறு மாதங்களுக்கு 3,000 ரிங்கிட்டாகிறது. இதுவே, ACCRUED INTEREST என்று சொல்லப்படுகிறது.

அதோடு, ஏழாவது மாதத்திற்குப் பிறகு கண்டிப்பாக COMPOUNDING INTEREST விதிக்கப்படும். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, சேர்ந்திருக்கும் அந்த 3,000 ரிங்கிட்டை 6 மாதங்களுக்குப் பிறகு மொத்தமாகச் செலுத்துவிட்டால் COMPOUNDING INTEREST விதிக்கப்படாது,” என்று அவர் விளக்கமளிக்தார்.

இதனிடையே, ‘மொரட்டோரியம்’ முடிந்த 6 மாத கால அவகாசத்திற்குப் பின்னர், தங்களின் கடனைத் திரும்பச் செலுத்த மக்களுக்கு 3 தேர்வுகள் வழங்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”பொதுவாக மூன்று தேர்வுகள் உள்ளன. முதல் தேர்வு என்பது, நமது கடன் 30 ஆண்டுகளுக்கு இருந்தால் அது 30 ஆண்டுகள் 6 மாதங்களாக நீட்டிக்கப்படலாம். இரண்டாவது தேர்வு என்பது, ஆறு மாதங்களுக்கான மொத்த வட்டி தொகையைச் சேர்த்து வைத்து மொத்தமாக ஏழாவது மாதத்தில் செலுத்தலாம். மூன்றாவதாக, நமது கடன் 30 ஆண்டுகளுக்கு இருந்தால், அதே காலக்கட்டத்தில் அதனைச் செலுத்த நமது மாதாந்திர கட்டணத்தில் மறு கணக்கீடு செய்து, அதில் கிடைக்கும் புதிய தொகையை மாதந்தோறும் 30 ஆண்டுகளுக்கு செலுத்தி வரலாம்,” என்று ஜெயகுமார் குறிப்பிட்டார்.

‘மொரட்டோரியம்’ அனைவருக்கும் தானியங்கி முறையில் வழங்கப்படும் நிலையில், இன்று ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி இதற்கான விண்ணப்பத்தைச் செய்யுமாறு ஏன் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்பதையும் ஜெயகுமார் தெளிவுப்படுத்தினார்.

சிலருக்கு ‘மொரட்டோரியம்’ தேவைப்படும்; சிலருக்கு தேவைப்படாது. சிலருக்கு 6 மாதங்களுக்கான முழு ‘மொரட்டோரியம்’ தேவைப்படும்; அதேவேளையில், சிலருக்கு 6 மாதங்களுக்கான பாதி ‘மொரட்டோரியம்’ மட்டுமே தேவைப்படும். இந்நிலையில், வாடிக்கையாளர்களே தங்களின் வங்கிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கே தேவையான ‘மொரட்டோரியம்’-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளலாம்,” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

வீடு, வாகனம், தனிநபர் கடன், கடன்பற்று அட்டை மற்றும் வியாபாரக் கடன் ஆகிய வங்கிக் கடன்களுக்கு ‘மொரட்டோரியம்’ வழங்கப்படுகின்ற வேளையில், இது குறித்த மேலும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள மக்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

— பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]

Related Articles

Video
YouTube