28.6 C
Gombak
Saturday, July 24, 2021

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைச் சம்பவங்கள்

Must read

கோலாலம்பூர், 01 ஜூலை  — இன்றைய நவீன உலகில் ”எல்லாவற்றிற்கும் உடனடி தீர்வு இல்லை… அதுபோல், “பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க தற்கொலை என்றுமே தீர்வாகாது.” 

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத புதிய தலைமுறை உருவாகி வருகிறது.

அதிலும், தற்போதைய கொவிட்-19 காலக்கட்டத்தில் சிறுவர்கள் மத்தியிலும் இந்த தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையிலும் வேதனையாகும்.

நாட்டில், 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 631 சம்பவங்களும் 2020-ஆம் ஆண்டில் 631 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாண்டில், ஜனவரி முதல் மே மாதம் வரையில் 468 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

அதில், 2019-ஆம் ஆண்டிலிரிந்து கடந்த மே மாதம் வரையில் பதிவாகிய மொத்த தற்கொலைச் சம்பவங்களில் 281 ஆண்களும் 1,427 பெண்களும் ஈடுபட்டிருப்பதாக அரச மலேசியப் போலிஸ் படையின் தரவுகள் காட்டுகின்றன.

அதுமட்டுமின்றி, 15 லிருந்து 18 வயதிற்குட்பட்டவர்களை உட்படுத்தியே அதிகம் அதாவது 872 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அந்த தரவுகள் காட்டுகின்றன.

இந்த இளம் வயதில் மாணவர்கள் இதுபோன்ற, விபரீத முடிவெடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், தற்போதைய கொவிட்-19 காலக்கட்டத்தில் கல்விப் பழுவும் மன அழுத்தமுமே முக்கிய காரணம் என்கிறார் மனநல சுகாதார ஆலோசகர் கானபிரகாஷ் வரதராஜு.

”இவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். தற்போது மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்கின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை. தங்களின் நண்பர்களைக் காண முடியாது. வீட்டிலேயேதான் வாழ்க்கையை நகர்த்த வேண்டி இருக்கிறது. கல்வி முறை மாறி இருக்கிறது. முழுமையாக இணையம் வழியாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதன் பின்னர், பாடங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மன அழுத்தத்தை கையாளத் தெரியாத மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்,” என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பிறரின் அன்பை எதிர்பார்த்து ஏங்கும் சிறுவர்களும் இதுபோன்ற தற்கொலையில் ஈடுபடுவதாக கானபிரகாஷ் தெரிவித்தார்.

”அந்த அன்பு அவர்களுக்கு கிடைக்காதபோது, முதலில் கை வெட்டிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவர். அந்த மற்றொரு தரப்புக்கோ பெற்றோர்களுக்கோ தமது அன்பு புரிகிறதா என்பதைக் காட்ட முயற்சிப்பார்கள். அதுவும் புரியாத பட்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டால்தான் இவர்களுக்கு தமது அன்பு புரியும் என்று இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இளம் வயதில் சிலர் தங்களை அடையாளத்தை தேடும் முயற்சியாக சமூக வலைத்தளங்களில் தங்களின் காணொளிகளையும் புகைப்படங்களையும் அதிகம் பகிர்ந்து கொள்வர்.

இந்த காலகட்டத்தில், தங்கள் மனதில் தப்பான விஷயங்கள் பதியும்போது, அவர்கள் இத்தகைய தவறான முடிவை எடுக்கின்றனர்.

சிலர், மிகக் குறைவான சவாலை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பார்கள்.

இதனால், சிறு பிரச்சனை அல்லது சிக்கல் வரும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற விபரீத முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

— பெர்னாமா

Related Articles

Video
YouTube