28.6 C
Gombak
Saturday, July 24, 2021

கோரப்படாத கொவிட்19 நோயினால் பலியானோரின் நல்லுடல்களை அடக்கம் செய்து வரும் கைஸ் இயக்கம்

Must read

கோலாலம்பூர், 14 ஜூலை (பெர்னாமா)– மலேசியாவில் கொவிட்19 நோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கைப் பதிவு கடந்த சில நாட்களாக மூன்று இலக்கமாகப் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் கொவிட்19 நோயினால் மரணமடைந்த சிலரின் நல்லுடல் கோரப்படாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு  KHAIS எனப்படும் சிலாங்கூர் இந்தியர் சமூக நலன் மரண சகாய இயக்கம்  கோரப்படாத அந்த நல்லுடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நற்பணியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.

இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது முதல், சிலாங்கூர் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் குறைந்த பட்சம் மூன்று மாத காலம் வரை கோரப்படாமல் இருக்கும் நல்லுடல்களை மருத்துவமனையின் துணையுடன் மீட்டு அதற்கு இறுதிச் சடங்கு செய்து வந்ததாக அவ்வியக்கத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ தட்சணாமூர்த்தி தருமன் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இயற்கையாக மரணமடைந்த 45 நல்லுடல்களுக்கு ஈமக்காரியம் செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இன்று தொடங்கி கொவிட் தொற்றால் மரணமடைந்து மருத்துவமனையில் கோரப்படாமல் இருக்கும் சடலங்களையும் மீட்டு இறுதிச் சடங்கு செய்யப் போவதாகக் கூறினார்.

”இன்று முதன் முறையாக கொவிட் தொற்றால் மரணமடைந்த ஒரு கோரப்படாத நல்லுடலை தகனம் செய்தோம். ஷா ஆலாமிலிருந்து சிப்பாங் லீமா மின்சுடலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இது எங்களுக்கு முதல் அனுபவமாக இருந்தாலும் மிகவும் பாதுகாப்பான முறையிலே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் இறுதிச் சடங்கு செய்யும் போது இயக்கத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் வரை கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கி வந்தனர்.

ஆனால் இம்முறை கொவிட்19 நோயினால் மரணமடைபவர்களின் நல்லுடல் என்பதால், இறுதிச் சடங்கு செய்வதற்கு இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆண்டுதோறும் அரசாங்கத்திடமிருந்து குறைந்த அளவிலான மானியமே கிடைப்பதால் பொது மக்கள் மற்றும் நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியையும் தட்சணாமூர்த்தி நாடுகிறார்.

”எங்கள் பகுதியிலுள்ள சட்டமன்ற அலுவலகத்திலிருந்து சிறிய தொகை நிதி கிடைக்கும். இதைத் தவிரத்து இன்னும் சில தரப்பினரிடமிருந்து ஆண்டுக்கு 5,000 ரிங்கிட்டுக்கும் குறைவான நிதியே கிடைக்கப்பெறுவதால் இயக்கத்தை வழிநடத்த பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் மருத்துவமனைகளில் இதுபோன்று கோரப்படாமல் நீண்ட நாட்களாக  வைக்கப்பட்டிருக்கும் சடலங்கள் பற்றி 017 – 7646933 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டால் அதை முறையாக மீட்க தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சேவையுடன் சேர்த்து அண்மையில் வசதி குறைந்த 300 பேருக்கு KHAIS இயக்கம் உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

— பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)

Related Articles

Video
YouTube